எமது இனிய உறவுகளே! இன்று நமது வலைப்பூவிற்கு வழங்கப்பட வேண்டிய கட்டுரை தாமதமாகத்தான் எழுத வேண்டியதாகிவிட்டது. இலங்கையின் கொடுங்கோலனும், உலகத்தால் போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவனும், தமிழீழ மக்களின் குருதி குடித்த கொடியவனுமான, ராசபக்சே பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, இந்தியாவிற்கு வருவதை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உறவுகள் ஒன்றிணைந்த எழுப்பிய குரலோசை, எரிக்கப்பட்ட ராசபக்சேவின் கொடும்பாவி, எமது இனத்தின் கருவறுக்க முனைந்த சிங்களக் கொடி எரிப்பு என்று தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு அலை எழுச்சியோடு இருந்தது. மானமுள்ள மனிதனாக மகிந்தா இருந்தால், அவன் இந்த மண்ணை மிதிக்கக்கூடாது. இந்த கொடுங்கோலன் இந்தியாவிற்கு வரும்போது அவனுக்கு கருவி கொடுத்து ஆதரித்த இந்திய பார்ப்பனிய பேராதிக்க அரசு கைகொடுத்து வரவேற்கப் போகிறது. சோனியாவின் முகத்தில் புன்னகை பூக்கப்போகிறது. அது எம் தமிழனை அழித்த வெற்றிப் பெருமிதமோ? என்று நாமெல்லாம் வயிற்றெறிச்சலோடு அந்தப் படங்களை காணப்போகிறோம்.
அங்கங்கு எல்லாம் சென்னை தொடங்கி குமரி வரை எல்லா இடங்களிலும் எதிர்ப்புத் தீ பற்றி எரிந்தது. கடுமையான வெயில். எதனையும் பொருட்படுத்தாமல் களத்திற்கு வந்த தமிழ் உறவுகளின் அந்த உணர்வு உண்மையிலேயே தமிழீழ விடுதலைக்கான அச்சாரத்தை உறுதிப்படுத்தியது. உறுமிக் கொண்டு திரிந்த ராசபக்சே, திமிர் அடங்குவதற்கு இந்த எதிர்ப்புக் குரல் பெரிதும் உறுதுணைப் புரிந்தது. உலகத் தமிழ் உறவுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த எதிர்ப்பு நிகழ்வுகள் உள்ளபடி நம்முடைய மனங்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. கடும் புழுக்கத்திலும், வெயிலின் கொடுமையிலும்கூட இதயம் குளுமையாக இருந்தது. நமது உணர்வு அடங்கவில்லை. நமது இன எழுச்சி ஒடுக்கப்படவில்லை. நமது ஆற்றல் அழிக்கப்படவில்லை என்பவற்றிற்கெல்லாம் அடையாளமாக நடைப்பெற்ற நிகழ்வுகள் அமைந்தது. நாம் தோற்றுப்போக மாட்டோம் என்பதை வலியுறுத்திய நமது தமிழ் தேசிய தலைவர்கள் எல்லாம் சேர்ந்த கூட்டத்தையும், நடந்த நிகழ்வுகளையும் கண்டு மகிழ்ச்சி பெருமிதம் அடைந்தார்கள்.
தமிழீழ உறவுகளுக்கு இந்த போராட்ட நிகழ்வுகள் நிச்சயமாக ஒரு வெளிச்சத்தை கொண்டுபோய் சேர்க்கும் என்ற நம்பிக்கை எமக்கும் இருக்கிறது. நாம் விடுதலையை யாசித்துப் பெறும் கூட்டமல்ல. விடுதலையை போராடி பெறும் கூட்டம் என்பதை புலப்படுத்திய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. தமிழீழம்தான் எமது தீர்வு என்று எமது தேசியத் தலைவர் கூறியபோது, மறுத்த உலகம், இன்று இதைத் தவிர்த்து வேறு தீர்வல்ல என்று முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த முணுமுணுப்பு பேரோசையாக கேட்கும் காலம் மிக அருகில் இருக்கிறது. ராசபக்சே என்ற ரத்தவெறி பிடித்த கொடுமைக்காரன், இந்தியாவிற்கு வருவதை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதிக்கும் நிலை ஏற்படுமாயின் அது இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக அமையும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எரிமலையாய் வெடித்தார். எமது தேசியத் தலைவரின் தாயார் மருத்துவத்திற்காக இந்தியா வந்தபோது, மறுத்து திருப்பி அனுப்பிய இந்த மாபாதகர்கள், எம்மை, எமது இன உறவுகளை கொன்றொழித்து, அவர்களின் உளவியல் தன்மைகளை சிதைத்தழித்து, நம்மையெல்லாம் வெறுமையாக்க நினைத்த உலக மக்களால் போர் குற்றவாளி என்று அறியப்பட்ட ராசபக்சேவிற்கு பெரும் வரவேற்பு அளிக்கிறது என்றால், இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு, குறிப்பாக இந்தியாவில் காலணியாக இருக்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கு பெரும் அவலத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கிற போக்கையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்தியம்புகிறது.
ஆனாலும்கூட நாம் யாசித்துப் பெறும் நிலையிலிருந்துமாறி, போராடி பெறும் நிலைக்கு வந்துவிட்ட காரணத்தினால், தமிழனுக்கான உரிமைகள் மட்டுமல்ல, தமிழனுக்கான தன்மானத்தைக்கூட நாம் போராட்டங்களால்தான் வென்றெடுக்க வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம். ராசபக்சேவுக்கு அளிக்கப்படும் வரவேற்பை மிகக் கடுமையாக நாம் கண்டிக்கும் அதே வேளையில், இன்றைய செய்திகளில் ராசபக்சே பேசிய திமிரான பேச்சுக்கு நாம் கூடுதலான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டியது கடமை என கருதுகிறோம். இந்த பெருங்கொடுமைக்காரன் இந்தியாவிற்கு புறப்படுவதற்குமுன் இலங்கையிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்களவை உறுப்பினருடன் நடத்திய கலந்தாய்வில் எந்த நிலையிலும் மேதகு தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட தமிழீழம் என்பதைக் குறித்து தம்மிடம் பேச வேண்டாம் என்றும், வன்னி மக்களின் மீள்குடியேற்றம், அத்துமீறிய சிங்களர் குடியேற்றம் என்பவைகளைக் குறித்து பேசும்போது மிக திட்டவட்டமாக இலங்கையில் நடைபெற்ற கடும் சமரின்போது, திட்டமிட்டு தமிழர்களின் கட்டமைப்பை, அவர்களின் பண்பாட்டு சூழலை உடைத்தெறிந்த சிங்கள காடையர்களின் வெறியாட்டத்தால் சிதைவடைந்த 1 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளை கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பால் வைக்கப்பட்டபோது அதை மறுத்திருக்கிறான். உலகமெங்கும் பிச்சையெடுத்து பொருள் சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த இனவெறியன், தமிழர்களின் உழவு நிலங்களைக்கூட சீரமைத்துத்தர முடியாது என்ற திட்டவட்டமாக மறுத்துரைப்பதின் மூலம் ஒன்று நமக்கு புரிகிறது, எந்த நிலையிலும் இந்த இனவெறி ஆதிக்கத்தின்கீழ் நம்மால் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. ஆகவே நாம், ஐந்தாம் கட்ட விடுதலைப் போராட்டத்தை துவக்க வேண்டிய கட்டாய நிலைக்கு எதிரியால் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இப்படி ஒரு இன அழிப்பு குற்றவாளியாக இருக்கும் இந்த கொடுங்கோலனை இந்தியா பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறதே? எந்த அடிப்படையில் இது சரியானது? என்று நமக்கு புரியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர், மூத்த அரசியல் அறிஞர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள், கொலைபாதகன் ராசபக்சே இந்திய மண்ணில் காலடி எடுத்து வைப்பதை அனுமதிக்க கூடாது. பல்வேறு நாடுகள் போர் குற்றவாளி என தெரிவித்துள்ளன. அவன் கொலைக்காரன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலை நடந்து ஓராண்டு கழிந்துவிட்டது. ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ராசபக்சேவின் உண்மையான நோக்கம், எஞ்சியுள்ள தமிழர்களையும் அழித்துவிட்டு அதை சிங்கள நாடாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு இந்தியாவின் நடுவண் அரசும், மாநில அரசும் துணைபோகின்றன.
இத்தாலியின் பாசிச ஆட்சியாளன் முசோலினி எத்தியோப்பியா நாட்டில் படுகொலை நிகழ்த்தினான். ஜவஹர்லால் நேரு 1934ஆம் ஆண்டில் இத்தாலி சென்றபோது இந்த காரணத்தினாலேயே முசோலினியை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் நேருவின் பேரன் மனைவி, சோனியாவின் நிலை நேருவின் கொள்கைக்கு எதிராக இருக்கிறது. இது ஏற்கத் தக்கதல்ல. அந்த கொலைக்காரன் இந்தியாவிற்கு வரக்கூடாது என கடுமையாக கருத்துரைத்துள்ளார். அதுமட்டுமல்ல, ராசபக்சே உடனழைத்து வரும் இன்னொரு நல்லவன் யார் தெரியுமா? டக்ளஸ் தேவானந்தா. இவன் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் ராசபக்சேவின் அரசவையிலே ஒரு அமைச்சர். இன்றுவரை ஒரு தமிழரை சென்னையிலே சுட்டுக் கொன்ற காரணத்திற்காக சூளைமேடு காவல்நிலையத்திலே இந்த டக்ளஸ் தேவானந்தாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்திலே இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆக இரண்டு கொலைக்குற்றவாளிகள் இணைந்தே இந்தியாவிற்கு வருகிறார்கள். இந்த கொலைக் குற்றவாளிகளை இந்தியாவின் பிரதமர் வரவேற்கப்போகிறார்.
இதைவிட பெருங்கொடுமை, தூது அனுப்பியே பழக்கப்பட்டுவிட்ட தமிழ் நாட்டு முதல்வர், இப்போதும் ராசபக்சேவிற்கு ஒரு தூது அனுப்புகிறார். கடந்த ஆண்டு அனுப்பிய தூது எதுவரை இருக்கிறது என்பது இதுவரை நமக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு உண்மையை அவர் போட்டுடைத்திருக்கிறார். 80 ஆயிரம் மக்கள் இன்னமும் அந்த கொடுங்கோலன் அமைத்திருக்கும் வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். இப்படி தமிழ் மக்களை அவமானப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் இந்த கருணாநிதி, செம்மொழி மாநாடு நடத்துவதற்காக முனைப்புக் காட்டுகிறார். இது தமிழர்களின் உணர்வுகளை கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
ராசபக்சே ஏன் இந்தியாவிற்கு வருகிறான்? தமிழீழ மக்களுக்கான தீர்வைச் சொல்லவா? இல்லை. இங்கே இந்திய அரசுடன் புதிதாக ஒப்பந்தங்களைப் போட. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் (ஏற்கெனவே குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளை இலங்கை அரசிடம் ஒப்படைத்ததின் விளைவுகள் இந்திய அரசு மறந்திருக்காது என்று கருதுகிறோம்). இப்படி தமிழர்களை கொன்றொழிக்கும் கொடுமையைச் செய்ய மீண்டுமாய் ஒப்புதல் பெறத்தான் ராசபக்சேவின் பயணம் அமையப்போகிறது. தமிழர் வாழும் பூமியிலே அவர்களின் கோவில்களை உடைத்து, அந்த மண்ணிற்காக தம்மை ஈகமாய் தந்த மாவீரர்களின் கல்லறைகளை உடைத்தெறிந்து, நம்மை மேலும் மேலும் அவமானப்படுத்தும் இந்த காட்டுமிராண்டி இந்தியாவிற்கு வருவது முழுக்க முழுக்க தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்.
ஆறரைக் கோடி தமிழ் மக்களும் உயிரோடு இருந்தும்கூட நாம் தமிழீழ மக்களை காப்பாற்ற முடியாத கையாளாகாதவர்களாக மாறிவிட்டோமே. நாளைய வரலாறு நம்மைப் பார்த்து காரி உமிழிழும். என்னச் செய்யப் போகிறோம். நாம் தொடர்ந்து இந்த போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். எத்தனை ராசபக்சேக்கள் வந்தாலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை வரலாற்றிலே பதிவு செய்ய வேண்டும். கொடுங்கோலன் ராசபக்சே இந்திய மண்ணில் காலடி எடுத்து வைப்பது தமிழ் நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட சவால். அதை முறியடிக்க வேண்டும். தமிழீழ குடியரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்த கொடுங்கோலர்களுக்கு உணர்த்த வேண்டும். மேதகு தேசிய தலைவரின் தலைமையில் தமிழீழம் வெற்றி பெறும். அதுவரை நமது போராட்டம் முடிவுறாது.




0 comments:
Post a Comment